சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன்

திருப்பம் உன்னத அழைப்பு ஊழியத் தோற்றம்
அபிஷேக வல்லமை பெருந்திரள் சென்றடைவு அழுகையின் பள்ளத்தாக்கு

டாக்டர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தேவதரிசனத்தின்படி, இயேசு அழைக்கிறார் ஊழியங்கள் ஸ்தாபிக்கப்பட்டது. 1935 ம் ஆண்டு, ஜுலை மாதம், 1 ம் தேதியன்று பிறந்த இவர், வறுமையினாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தினாலும் துன்பப்பட்டு, உபத்திரவத்தைக் கடந்துவந்தார்.


திருப்பம்

தாங்கொண்ணா வறுமையும், வேலையில்லாத் திண்டாட்டமும் வாழ்க்கைப் பாதைக்கு முட்டுக்கட்டையானதால், ‘உயர்வுக்கு வழி ஏதுமில்லை, ஆதரிப்பார் ஒருவருமில்லை’ எனத் தீர்மானித்து, 1955 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 11 ம் தேதியன்று, இளைஞனாயிருந்த சகோதரர். தினகரன் தன்னுடைய வாழ்க்கையின் எல்லைக்கு வரத்தீர்மானித்தார்.

‘வாழ்க்கையின் முடிவே என் துயரங்களின் முடிவு!’ என்றெண்ணி அருகிலிருக்கும் இரயில்பாதையை நோக்கிச் சென்றார். ‘எப்போது துரித இரயில் வரும்? எப்போது நான் என் உயிரை மாய்த்துக்கொள்ளுவேன்?’ என்று கண்கள் நிறைந்த கண்ணீரோடும், மனம் நிறைந்த திகிலோடும், துரித இரயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.

“நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன்” (எரேமியா 1:5).

ஆம்! நம் அன்பிற்குரிய சகோதரர் பிறக்குமுன்னரே ஆண்டவருக்கென்று உத்தம ஊழியனாகத் தெரிந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆகவே, தேவன் அவரைக் குறித்த நேரத்தில் மரண இருளின் பள்ளத்தாக்கினின்று தூக்கியெடுத்தார்.

எதிர்பாராதவிதமாக, அவர் காவல் துறையில் பணிபுரிந்துகொண்டிருந்த தன்னுடைய சித்தப்பாவைச் சந்திக்க நேர்ந்தது தேவத் தீர்மானமே! தெய்வபக்தி நிறைந்த அவருடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும், சகோதரருடைய உள்ளத்தில் அளவில்லாத விசுவாசத்தை ஏற்படுத்தியது. சமாதானம், சந்தோஷம், நம்பிக்கை போன்றவை அவருடைய மனதில் வெள்ளமெனப் பாய்ந்தோடின. அவருடைய வாழ்க்கை முற்றிலுமாக மாற்றப்பட்டது. அகமகிழ்வுடன் வீட்டிற்குச் சென்றார். முழங்காற்படியிட்டு ஜெபித்தபோது தேவபிரசன்னத்தினால் நிரப்பப்பட்டார். உண்மை தெய்வத்தை முகமுகமாய்ச் சந்திக்கும் பாக்கியம் பெற்றடைந்தார்.

இதன் பின்னரே, அவருடைய வாழ்க்கையில் இயற்கைக்கும் அப்பாற்பட்ட நிகழ்வுகள் நிகழ்ந்தேற ஆரம்பித்தன. வாழ்க்கையை உருமாற்றும், நித்திய உண்மைகளை எடுத்துரைக்கும், ஆன்மாவில் மரித்தோரை உயிர்ப்பித்து மறுரூபப்படுத்தும், பரிசுத்த வேதாகமத்தைக் கருத்தூன்றிப் படிக்கும் அணையா தாகம் அவருக்குள் ஏற்பட்டது. ஆம்! மகிமை பொருந்திய சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆண்டவரின் பாதத்தில், பல மணி நேரங்கள் செலவழித்து, அவருடன் உரையாடி, அவரை எங்கும் உண்மையாய்த் தேட ஆரம்பித்தார்.

மேற்பகுதி


உன்னத அழைப்பு

ஏழு வருட காத்திருப்பு

1962 ம் வருடம், அக்டோபர் மாதம், 9 ம் தேதியன்று இரவு வெகுநேரம் ஆண்டவரின் பாதத்தில் காத்திருந்தார். ‘எப்படியாவது உம்மை எனக்கு வெளிப்படுத்தும்...!’ என்று மனக் கதறலுடன் இடைவிடாது விண்ணப்பம் பண்ணினார்.

“என் தேவனே! இப்போது என் ஜெபத்தைக் கேட்டருளும். உம்மை எனக்கு வெளிப்படுத்தியருளும். உம்முடைய வல்லமையை எனக்கு அருளிச் செய்தருளும். இல்லையெனில், என் உயிரை எடுத்துக்கொள்ளும். வல்லமையற்ற கிறிஸ்தவனாக வாழ எனக்கு மனமில்லை!”

மறுநாள் 1962 ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 10 ம் தேதி ஓர் இன்ப நாள்!

வழக்கம்போல வங்கியின் வேலைகளை முடித்துவிட்டு இரவு 9:30 மணிக்கு வீட்டை அடைந்தார். இரவு உணவிற்குப் பின்னர், குடும்பத்தினருடன் ஜெபத்தில் இணைந்தார். அப்போதும், ‘இயேசுகிறிஸ்துவை எப்படியாவது தரிசிக்க வேண்டும்’ என்கிறதான தாகம் அவருக்குள் மேலோங்கியிருந்தது. அவ்வேளையிலே, ஒரு தெய்வீக பிரசன்னம் அவருக்கு முன்பாகத் தோன்றியது! முற்றிலுமாக, மகிழ்ச்சியின்மேல் மகிழ்ச்சியில் ஆழ்த்தப்பட்டார். ஆண்டவர் அவருடைய கண்களைத் திறந்தார். மகிமையின் பிரகாசத்தினால் நிறைந்திருந்த மகிபரின் முகத்தினின்று அற்புதமான புன்னகை உருவாகியது.

“என் மகனே! நான்தான் இயேசுகிறிஸ்து! நீ என்னை மிகவும் உண்மையாக தேடினதின் நிமித்தம், நானே நேரில்வந்து உன்னை ஆசீர்வதிக்கிறேன்!” என்று சொன்னார்.

ஆம்! மூன்று மணிநேரம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை முகமுகமாகத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றார் அவர். கோடிக்கணக்கானோருடைய வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுவதற்கு அவரைப் பயன்படுத்தப்போவதாக, அன்றே தேவன் உடன்படிக்கை ஏற்படுத்தினார்.

"என் மகனே! இப்பூமியின் ஜனங்கள் பலவிதங்களில் என் அன்பைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அவர்கள் என்னுடைய அன்பை நேரில் கண்டதில்லை. ஆகவே, என்னுடைய அன்பையும், மனதுருக்கத்தையும் உன்னில் அதிகமாக ஊற்றுகிறேன். இந்த அன்பு அவர்களுடைய இருதயத்தை ஆறுதல்படுத்தி, அவர்களுடைய நோய்களைக் குணமாக்கும். உன்னுடைய ஜீவியம் என்னுடைய பரிசுத்த ஆவியின் வல்லமைக்கு சாட்சியாக அமைந்திருக்கும்," என்பதே அருள்நாதர் இயேசுகிறிஸ்து அவருக்குக் கொடுத்த உடன்படிக்கையின் வாக்குறுதி.

மேற்பகுதி


பிற்பகுதி|| நிறைவு

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.