சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன்

திருப்பம் உன்னத அழைப்பு ஊழியத் தோற்றம்
அபிஷேக வல்லமை பெருந்திரள் சென்றடைவு அழுகையின் பள்ளத்தாக்கு

ஊழியத் தோற்றம்

சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அருள்நாதர் இயேசுகிறிஸ்துவை உத்தமமாகத் தேடினதினிமித்தம், தேவமகிமையின் தரிசனங்களினாலும், உடன்படிக்கைகளினாலும் வழிநடத்தப்பட்டார்.

வங்கியிலே உயர் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையிலும்கூட, மிகுந்த பக்தி வைராக்கியத்துடன் ஆண்டவருக்கென்று ஊழியம் செய்துவந்தார். இப்படித்தான், இயேசு அழைக்கிறார் ஊழியமானது ஒரேயொரு தேவமனிதனைக் கொண்டு உருவானது. இனம், மதம், மொழி போன்ற வேறுபாடுகளின்றி, இவ்வுலகத்திலுள்ள எல்லா மனிதரையும் இவர் தன்னுடைய சொந்த சகோதர, சகோதரிகளைப் போன்றே நேசித்து வருகிறார். அவர்களுடைய கண்ணீரை தன்னுடையதாகக் கருதி, அன்போடும், மனதுருக்கத்தோடும் அவர்களுக்குப் போதிக்கிறார். ஜனங்களின் துயர் துடைக்கும் அற்புதங்களுக்காகவும், ஆசீர்வாதங்களுக்காகவும் ஆண்டவரிடத்தில் கண்ணீருடன் மன்றாடுகிறார்.

இவருடைய செய்திகளிலும், பிரார்த்தனைகளிலும் ஆண்டவருடைய வல்லமை வெளிப்படுகிறது. ஆகவே இன்று “இயேசு அழைக்கிறார் ஊழியங்கள்” பலுகிப் பெருகிவருகிறது. தேவனுடைய பெரிதான கிருபையினிமித்தம் இன்று இவ்வூழியம் 20 பிரதான திட்டங்களைக் கொண்டு உலகம் முழுவதிலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்து வருகிறது.

இவரது அன்பிற்குரிய மனைவி சகோதரி. ஸ்டெல்லா தினகரன் அவர்கள் இன்பத்திலும், துன்பத்திலும் இவரோடு இணைந்து ஆண்டவருக்குப் பிரியமான வழிகளில் ஊழியம் செய்து வருகிறார்கள். தேவசித்தப்படி, உடைந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதிலும், கோடிக்கணக்கானோரின் துயர் துடைப்பதிலும் பெரும்பங்காற்றுகிறார்கள். இவரது மகன் சகோதரர் பால் தினகரன் தேவ அழைப்பைப் பெற்றுக்கொண்ட தன்னுடைய 18 ம் வயது முதற்கொண்டு இன்றுவரை இவரோடு இணைந்து உத்தமமாக ஊழியம் செய்துவருகிறார்.

மேற்பகுதி


அபிஷேக வல்லமை

1962 ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 10 ம் தேதியன்று சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றுக்கொண்டார். தீர்க்கதரிசனம், வியாக்கியானம், சுகமளிக்கும் வரம், ஞானத்தின் வார்த்தைகளைப் போதிக்கும் வரம் போன்றவைகளைக் கொண்டு கர்த்தருடைய ஊழியத்தை மிகுந்த ஜாக்கிரதையுடன் செய்துவருகிறார். தனிப்பட்ட முறையில் ஜனங்களை சந்திப்பதிலும், அவர்களுடைய கடிதங்களுக்குப் பதிலளிப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார். இந்த அன்பிற்குரிய ஆறுதலளிக்கும் செயல் மனமுடைந்தோரனைவரையும் தேற்றி ஆறுதல்படுத்துகிறது. அமைதியின்றித் துன்புறும் அனைவரும் தெய்வீக அமைதியைப் பெற்றுச் சீர்பொருந்தின வாழ்க்கை முறையை மேற்கொள்ள ஆண்டவர் இவரை வல்லமையாக எடுத்துப் பயன்படுத்துகிறார்.

பிரார்த்தனைக் கூட்டங்களில், பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் பிரகாரம், திரள் கூட்டத்தில் அமர்ந்திருக்கும் தனிப்பட்ட நபர்களின் பெயரைச் சொல்லி அழைத்து, அவர்களுடைய ஆவிக்குரிய, மன ரீதியான, உணர்ச்சிப் பூர்வமான, மற்றும் சரீரப் பிரகாரமான பிரச்சினைகளைத் துல்லியமாக அறிவிக்கிறார். பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்கள் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் கூறிய காரியங்கள் அனைத்தும் உண்மையானது என்று சொல்லி மேடைக்கு வந்து தேவனுடைய நாமத்தை மகிமைப்படுத்துகிறார்கள்.

குறிப்பிட்ட பிரார்த்தனைக் கூட்டங்களில் தேவவழிநடத்துதலின் பிரகாரம், லட்சக்கணக்கானோர் அமர்ந்திருக்கும் கூட்டத்தில், ‘தேவசித்தம் அறிந்துகொள்ள விரும்பும் யாராவது மேடைக்கு வாருங்கள்’ என்று சொல்லி அழைத்து அவர்களுடைய கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்கால வாழ்க்கை நிலையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கிறார். கர்த்தருடைய மகத்துவமான கிரியைகளைப் பார்த்து ஜனத்திரள் ஆச்சரியமடைகிறது.

மனித சக்திகளுக்கும் அப்பாற்பட்ட பிரச்சினைகளைக் குறித்து அநேகர் அவருக்குக் கடிதம் எழுதுகிறார்கள். பரிசுத்த ஆவியினால் வழிநடத்தப்பட்டு அவரும் அவர்களுக்கு பதில் கடிதங்களை அனுப்புகிறார். ஆண்டவரின் அருளால் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்தே அநேகருடைய வாழ்க்கையில் மாறுதல்கள் உண்டாகிறது.

பற்பல பிரார்த்தனைக் கூட்டங்களில் சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்கள் தேவசெய்தியை அளிக்கும்போது, கனமான மழைபெய்து கூட்டம் தடைபடும் வண்ணம் தோன்றும். ஆனால், அவருடைய உருக்கமான பிரார்த்தனைகளுக்குச் செவிகொடுக்கும் தேவன், இயற்கைக்கும் அப்பாற்பட்ட விதத்தில் மழையை நிறுத்தி, அற்புதமாக கூட்டம் தொடர்ந்தேறும்படி செய்கிறார்.

கோடிக்கணக்கானோர் பெற்றுக்கொண்ட கடல் மணலத்தனையான அற்புத சாட்சிகள் அனைத்தும் இயேசு அழைக்கிறார் அலுவலகத்திலே தேவநாமத்தின் மகிமைக்கென்று பத்திரமாக வைக்கப்பட்டிருக்கின்றன. குருடர்கள் பார்வையடைவதும், முடவர்கள் நடப்பதும், கேன்சரும், கட்டிகளும் மறைந்துபோவதும் எத்தனை வியப்பானது!

மேற்பகுதி


முற்பகுதி|| பிற்பகுதி

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2017 Jesus Calls. All rights reserved.