சகோதரி. ஸ்டெல்லா தினகரன்

1938 ம் ஆண்டு, மே மாதம், 24 ம் தேதியன்று பிறந்த இவர், 1959 ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 17 ம் தேதியன்று, சகோதரர். டி.ஜி.எஸ். தினகரன் அவர்களுடன் திருமணத்தில் இணைந்து, இவ்வூழியத்தின் முதுகெலும்பாகச் செயலாற்றி வருகிறார்.

1963 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 14 ம் தேதியன்று பரிசுத்த ஆவியின் அளவில்லாத அபிஷேகத்தைப் பெற்றுக்கொண்டார். பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலோடு, இந்தியாவிலும், உலகமெங்கிலும் பெண்கள் மத்தியில் மாபெரும் எழுப்புதலைக் கொண்டு வரவேண்டும் என்னும் நோக்கோடு மிகுந்த உற்சாகத்துடன் இறைத்தொண்டாற்றி வருகிறார்.

ஊழியத்தின் துவக்க நாட்களிலே மிகவும் பயந்த சுபாவத்தோடிருந்த இவர், தற்போது மிகுந்த தைரியத்துடன் பொதுக்கூட்டங்களில் பிரசங்கிக்கிறார். இவர் வழியாக ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, உத்தமமான வழிகளிலே நடக்கும் பெண்மணிகள் ஏராளம். பொதுக்கூட்டங்களில் இவர் அளிக்கும் நற்செய்தியைக் கேட்பதற்கென்று நகரத்தின் எல்லாப் பக்கங்களிலுமிருந்து பெண்கள் கூட்டம் திரள்திரளாகக் கூடிவருகிறது. ஆண்டவரால் இவருக்கு அளிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வரங்களின் வழியாக, ஜனங்கள் மன ரீதியான, உணர்வுப் பூர்வமான குறைபாடுகள் தீர்ந்து, விடுதலையுள்ள வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள். பிசாசுகளின் கட்டுகளினின்று விடுதலையடைகிறார்கள். தங்களுடைய பாவங்களுக்காக மனம் வருந்தும் ஒவ்வொருவரும், கண்ணீருடன் ஆண்டவரிடத்தில் தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறார்கள்.

மீடியா ஊழியங்களிலும் சகோதரி. ஸ்டெல்லா தினகரன் அவர்களை ஆண்டவர் வல்லமையுடன் எடுத்துப் பயன்படுத்துகிறார். சீர்குலைந்துபோன அநேகருடைய வாழ்க்கை நிலையை உருவேற்படுத்தும் அற்புதமான புத்தகங்களை எழுதியுள்ளார். 1989 ம் ஆண்டு வெளிவந்த ‘விலையுயர்ந்த முத்து’ என்னும் புத்தகம் சிறந்த கிறிஸ்தவ புத்தகத்திற்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறது.

பல்திட்ட ஊழியங்களில் தன்னை &டவ;டுபடுத்திக்கொள்வதுடன், சகோதரி. ஸ்டெல்லா தினகரன் அவர்கள் இந்தியாவிலும், பல்வேறு நாடுகளிலும் பெண்களுக்கான மாநாடுகள் நடத்துவதைக் கருத்திற்கொண்டு செயல்படுகிறார். இம்மாநாடுகளில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொள்ளுகிறார்கள். கூட்டத்தின் இறுதியில் ஆண்டவருக்கென்று தங்களை ஒப்புக்கொடுக்கும் பெண்கள் அனைவரையும் மேடைக்கு முன்பதாக அழைக்கும் கண்கொள்ளாக் காட்சி காண்போரின் கருத்துக்களைக் கவருமோர் உற்சாகத்தின் அருமருந்தாகும்.

1988 ம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஆண்டவர் ‘எஸ்தர் ஜெபக்குழுவின்’ துவக்கத்தைப் பற்றியதொரு தரிசனத்தை அவருக்குக் கொடுத்தார். இப்பரலோக தரிசனத்தை நிறைவேற்றும் பணியில் தன்னுடன் இணைந்தவர்களைக் கொண்டு ஜுன் மாதம் சென்னையில் பெண்கள் குழுக்களை ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் எஸ்தர் ஜெபக்குழு உறுப்பினர்கள் அனைவரும் பெண்களின் எழுப்புதலுக்காக திறப்பின் வாசலில் நின்று மன்றாடுகிறார்கள். ஒவ்வொரு மாதமும் ஜெபக்குறிப்புகள் சகோதரியின் வாயிலாக அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உலகமெங்கிலும் தற்போது ஆயிரக்கணக்கான எஸ்தர் ஜெபக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், 1997 ம் ஆண்டு, நவம்பர் மாதம் முதல், பெண்களுக்கான ‘விலையுயர்ந்த முத்து’ என்னும் மாதாந்திரப் பத்திரிகையை வெளியிடுவதற்கு தேவன் கிருபை செய்தருளினார். உலகமெங்கிலும் தற்போது ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இப்பத்திரிகையின் மூலம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் அன்பையும், மனதுருக்கத்தையும் இத்தேசத்திலும், இவ்வுலகத்திலும் நிலைநாட்டுவதில் இவர்களின் பங்கு கனமுள்ளதாயிருக்கிறது.

Set As Default Homepage           ||            Share With A Friend           ||           Your Comments 

Copyright 2018 Jesus Calls. All rights reserved.